பிரிவுகள்
சினிமா விமரிசனம் திரைப்படம்

பொன்னியின் செல்வன் 1 : ஒரு பார்வை  

  பொன்னியின் செல்வன் 1 : ஒரு பார்வை  

இங்கிலாந்து போயிருந்த போது தியேட்டர் சென்று பிகில் படம் பார்த்தது, அப்புறம் கொரோனா, அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து போனபோது அண்ணாத்தே படத்துக்குப் பிறகு இப்போதுதான் தியேட்டர் போய் படம் பார்க்கிறேன்.

PS 1 படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன். பள்ளிக்காலங்களில் அம்மா பைண்ட் செய்து வைத்த பொ செ புத்தகத்தைப் படித்த பிறகு, கல்லூரி காலம் முடிந்து ஒரு முறை படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருஷங்களாக அதை மீண்டும் தொடவே இல்லை. இந்த முறை படம் வெளிவருவதற்கு முன் படிக்கலாம் என்ற ஒரு டெம்ப்டெஷன் இருந்தது. கோவை புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வாங்கியும் விட்டேன். ஆனால் நான்கைந்து பக்கங்கள் வாசித்ததும் பழைய வாசித்த நினைவுகள் வரவும் நிறுத்திக் கொண்டேன். வாசிக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். அத்தனை நேரமும் என்னிடம் இல்லாதிருந்ததும் உண்மை. எந்தவிதமான முன்முடிவுகளும் இல்லாமல் படத்தை நேரடியாகச் சென்று பார்ப்பது என்று முடிவு பண்ணினேன்.

எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்து இங்கு மற்றும் வாட்ஸ்அப்பில் நடத்திய crash course எல்லாம் படித்தும் கதை சரியாக நினைவுக்கு வராததால் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஒருவழியாக படத்தைப் பார்த்தாகிவிட்டது.


1. படத்தை திரையில் பார்த்தபோது, பாகுபலி அளவுக்கு பிரமாண்டம் இல்லையென்றாலும் நன்றாகவே இருந்தது. போர்க்காட்சிகள், கடைசி கடல் காட்சிகள் தவிர அதிக இரைச்சல் இல்லை.


2. திரைக்கதையில் ஒரு சில பொத்தல்கள், இடைவெளிகள் இருந்தபோதும், படம் புரிந்தது. நான் திரைக்கதையை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்.


3. சோழா சோழா பாட்டுக்கு நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு சபாஷ். படத்துடன் இணைந்து பார்க்கும்போது தான், திரைகாட்சிக்கு, சொற்கள் ஓர் அழுத்தத்தைக் கொடுத்திருப்பது தெரிகிறது.


4. ஒரு இடத்திலும் திரை வசனம் ஷார்ப்பா இல்லை. ‘நீயும் ஒரு தாயா?’ என்று மொக்கையாக ரகுமான் பேசும் ஒரு வசனம். நிறைய இடங்களில் இப்படிதான் இருக்கிறது. பல இடங்களில் abrupt ஆக வசனம் நிற்பது போல இருக்கிறது.


5. ரஹ்மான் இசை நன்றாகவே ஒட்டியிருக்கிறது திரைப்படத்துடன். Historical, Non-Historical என்றெல்லாம் பேச தேவையும் இல்லை.


6. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற பதட்டம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லாத கதைக்களம் இது. அதனால், அடுத்து பாகம் என்ன என்று கிளப்பிவிடாமல், கதையின் தொடர்ச்சியை இரண்டாம் பாகமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைப்பதால், இந்த படம் ஓகேதான். இங்குதான் ஒரு நாவல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தன்னுள் இருக்கும் கதை சொல்லும் பாங்கை ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கிறது. அந்த வகையில் திரைக்கதையாக முடிந்த அளவுக்கு நியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.


7. மூலக்கதை அமரர் கல்கி என்று போட்டிருக்கிறார்கள். இதிலெங்கே கல்கியின் மரியாதை குறைந்தது என்று தெரியவில்லை. புத்தகத்தைப் புத்தகமாகப் பாருங்க; சினிமாவை சினிமாவாகப் பாருங்க. ஓப்பீட்டில் வைக்க ஒன்றுக்கொன்று ஏதுவான தளம் அல்ல. இது புரியாததால் தான் கல்கிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என்கிறார்கள்.


8. நடிகர்கள்? அவரவர் இடத்தை அவரவர் நிரப்பியிருக்கிறார்கள். அவ்வளவே..

அடுத்து தியேட்டரில் நடக்கும் அட்ராசிட்டிஸ் :

1. திரையில் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது நிறைய பேர் மொபைல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கண் முன்னாடி இத்தனை பெரிய ஸ்கிரீனில் படம் சத்தமாக ஓடும்போதும் மொபைல் பார்க்க தோன்றுகிறது என்றால், mobile addiction அதிகமாகி இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. சும்மாவே மொபைலைத் திறப்பதும் ஒன்றுமில்லாத மெசேஜுகளைப் படிப்பதும் மூடுவதுமாக இருக்கிறார்கள். ஆடின காலும் பாடின வாயும் நிக்காது என்பது போலதான் இது இருக்கிறது.


2. 40, 50 வயதில் இருப்பவர்களின் இறப்புகளைக் கேள்விப்படும் போதெல்லாம் இங்கு எல்லோரும் கவலை கொள்வதைப் பார்க்கிறோம். தியேட்டரில் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் பாப்கார்னும் பஃப்ஸும், கோக்கும், ப்ரெஞ்சு பிரைஸுமாக தட்டு தட்டாக டப்பா டப்பாவாக நொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். திரையரங்குகளில் நடக்கும் இந்த உணவு வணிகம் நம் உயிரை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


3. திரையில் புதிதாக வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ‘இது யாரு, இது யாரு’ என்று ‘கண்டுபிடியுங்கள் பார்ப்போம்’ என்று competition வேறு பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு குடும்பம் ஓட்டு மொத்தமாகவே இந்த டிஸ்கஷனில் இருந்தார்கள். அதற்காக கூகிளைத் துணைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது பெரும்சிறப்பு 😀.. இந்த படம் குறித்த over hype தான் இதற்கு காரணம்.

அவ்வளவுதான்.. எனக்குப் பொன்னியின் செல்வன் படம் பிடித்திருக்கிறது. டாட்.

பிரிவுகள்
சமுகம்

புத்தக வெளியீடு கோவையில்..

சிறுகதைகள், திறனாய்வுகள்

புத்தகங்கள் வெளியீடு

அகிலா  

புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள :

Discovery Book Palace

+91 99404 46650

Emerald Publishers

+91 98406 96574

Vijaya Pathippagam

+91 90470 87058

அன்பின் வணக்கம்..

கோவை இலக்கியச் சந்திப்பின் வழி, என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளிவர இருப்பதை பெருமையுடன் பகிர்கிறேன். 

நாள் : 24.04.2022 ஞாயிறு 

நேரம் : காலை 10 மணி

இடம் : ரோஜா முத்தையா அரங்கம், விஜயா பதிப்பகம், கோவை 

வெளிவரும் நூல்கள் : 

#சீமாட்டி (சிறுகதை தொகுப்பு)

#சமகால_இலக்கியம் – தொகுதி 1

#சமகால_இலக்கியம் – தொகுதி 2

#நின்று_துடித்த_இதயம் (மூன்றாம் பதிப்பு)

புத்தகங்களை வெளியிட்டு, உரைகள் நிகழ்த்தி, வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கும் ஆளுமைகளுக்கு என் பேரன்பு 🙏 

விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா, அவைநாயகன் அவர்கள், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள், ஓவியர் ஜீவானந்தன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள், கவிஞர், தோழி மஞ்சுளா தேவி, கவிஞர் அன்பு சிவா, பேச்சாளர் கவிஞர் மகேஸ்வரி சற்குரு, எழுத்தாளர் இளஞ்சேரல், கவிஞர் பொன் இளவேனில். 

எமரால்ட் பதிப்பகம், விஜயா பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் என புத்தக பதிப்பகத்தார் மூவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.. 🙏🙏

சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய இயக்குனர் பிருந்தா சாரதி அவர்களுக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தகங்களை சுவாசிக்கவும் வாசிக்கவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்..  

~ அகிலா