Posted in சமுகம், சமுதாயம், பெண் தொழிலாளிகள், பெண் முன்னேற்றம், பெண்கள்

மூணாறு தேயிலை தோட்டத்து பெண்கள்..

போராட்ட களம்..

கேரள மாநிலத்தின் மூணாறு தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகள் 2015 யில் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். அந்த காலகட்டத்தில் அவர்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்களின் ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு குறித்தும் கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணி மிகவும் மோசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர் அந்த பெண்கள்.

அவர் அரசு அதிகாரிகள் மீதே ஒழுக்கம் சார்ந்த குற்றம் சுமற்றியதாகவும். ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு போராட்டம் நடந்த காலகட்டத்திலும் இம்மாதிரியான ஒழுக்க சீர்கேடான விஷயங்கள் நடந்ததாக மட்டுமே அமைச்சர் கூறியதாகவும் அவரின் மலையாள பேச்சின் தமிழாக்கம் சுட்டுகிறது.

கேரளா, கம்யூனிசம் பேசும் குதர்க்கவாதிகளை (Critical Thinkers(!) என்றும் சொல்லலாம்) கொண்ட பிரதேசம். இந்த கம்யூனிசம் என்பது பொதுவியலை பேசும் ஓர் அமைப்பு. கம்யூனிஸத்தில் புழங்கிவரும் ‘தோழமை’, ஆண் பெண் என்னும் பால்பாகுபாடை உடைத்தெறிந்த சொல். இதனூடே கலவியல் குறித்து பேசுவோரும் உண்டு. அவ்வாறு உண்டா இல்லையா என்பது அதிலிருக்கும் மனிதர்களின் விருப்பம் சார்ந்தது என்று சொல்லிக்கொள்ளலாம்.

பெண்ணை மட்டுமே குறிக்கும் படிமங்களான, ‘கற்பு’, ‘வேசி’, ‘விபச்சாரம்’ போன்ற சொற்பிரயோகங்கள் கம்யூனிசத்துக்குள்ளும் பேசப்படுவதால், ஆண் பெண் இருபாலாரின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இந்த கம்யூனிச சதுரத்துக்குள் நடுநிலை கொண்டு பார்க்கப்படும் என்று முழுமையாய் நம்புவதற்கில்லை.

அரசு அதிகாரிகள், அரசு விருந்தினர் இல்லத்தை மது போதைக்கும், தவறான பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தியதை சொன்ன அமைச்சர், எதற்காக இந்த பெண்கள் நடத்திய போராட்ட காலத்தை, அதாவது 2015, அதற்குள் இழுக்கவேண்டும்? அந்த போராட்டம் நடத்திய பெண்கள் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக, அமைச்சர் சொன்னதாகத்தானே பொருள் கொள்ளமுடியும். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், பெண் என்பவளின் ஒழுக்கநிலைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஒவ்வொரு முறையும் ஆண்களின் ஒழுக்கம் சார்ந்த முறைகேடுகள் நடக்கும்போதும் அதை பெண்ணின் மீதே திருப்ப, பெண்ணுக்கு எதிரான அடக்குமுறைக்குள் கொண்டுவந்து நிப்பாட்டவே அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முயற்சிக்கின்றன.

இதன்மூலம் போதைக்காகவே பெண் என்னும் நடைமுறை, ஒவ்வொரு முறையும் இந்த ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. பெண்களை மூர்க்கமாய் எழச்சொல்லுகிறது. ‘ஆணாதிக்கம், ஆணாதிக்கம்..’ என்று பெண்கள் முழங்க முழங்க ஆண் சமூகம் சந்தோஷமாய் படையல் சாப்பாடு சாப்பிடுகிறது. கலகத்தை உண்டு பண்ணிய திருப்தியுடன் ஊடகமும் அடுத்த பக்கம் முகம் திருப்பிக்கொள்கிறது.

பெண்களை ஒழுக்கம் கொண்டு ஊனப்படுத்தாமல் தனிமனிதனும் சரி, ஊடகங்களும் சரி, அரசாங்கம் செய்யும் அரசியலாளர்களும் சரி இருப்பதில்லை.

அவர்கள் என்ன இலட்சியத்துக்காக, தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்தும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை குறித்து அதை 9 நாட்கள் போராட்டத்தில் அடைந்தும்விட்ட பிறகு, இத்தனை மாதங்கள் கழித்து அவர்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கதக்கதே. அவர் கிராமத்து ஸ்டைலில் பேசிவிட்டார், அதுதான் சரியாய் புரிந்துக் கொள்ளபடவில்லை என்றெல்லாம் முதலமைச்சரே சாக்குபோக்கு சொல்கிறார்.

தங்களுக்கு அரசியல் அமைப்புகளின் துணை தேவையில்லை என்று சொல்லி தனித்து போராடி வெற்றி கண்டவர்கள் அந்த தேயிலை தோட்ட பெண்கள் அமைப்பு தோழிகள்.

ஒரு பிரச்சனைக்காக போராடிய பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசி, பெண்ணின் ஒழுக்கத்தை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி அவளை பலவீனபடுத்தப் பார்க்கும் விஷயங்களைச் செய்கிறார்கள்.

அமைச்சர் சொன்னதை தவறு என்று ஒத்துக்கொள்ளாத முதலமைச்சரும், தான் பேசியது தவறு என்று மழுப்பலாய் ஒரு மன்னிப்புடன் அமைச்சரும், அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என போராடும் பெண்கள் உறுதியாயும் இருக்கிறார்கள்.

பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சமயம் இது. இம்மாதிரியான நிகழ்வுகள் நம்மை சீர்தூக்கி பார்க்கவைத்து சரி செய்துக்கொள்ளவும் முன்னேற்ற வழிகளை காட்டவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. போராட்ட களம் நம்மை உயர்த்திக்கொள்ள வழிவகுக்கட்டும்..

திசை மாறாமல் போராடுங்கள் பெண்களே!!

Posted in ahilas blog, இந்தியா, ஊழல், சமுகம், சமுதாயம், பொருளாதாரம்

பணபுழக்கமும் சிக்கனமும்..

counting-money

 

இந்திய அரசின் புது பொருளாதார அதிரடி திட்டத்தின்படி, நவம்பர் 8ஆம் தேதி இரவிலிருந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டதும் 500 மற்றும் 2000 புது ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டதும்ந நாம் அறிந்ததே. இந்த பரிமாற்றம் நடந்து நாடு சமன் பெற அதிக நாட்கள் எடுக்கலாம்.

வங்கிகளில் இருக்கும் நம் பணமே நம் கைக்கு வந்து சேர ஆகும் தாமதமும் இதில் அடங்கும்.

500-and-1000-rupee-notes-afp_650x400_81478769280

பண மாற்றம் வந்த இந்த ஐந்து நாட்களில் கையிலிருக்கும் நூறு ரூபாய் தாள்களை அனாயாசமாக செலவழிக்காமல் பார்த்துக்கொள்ள நான் பட்ட கஷ்டம். பழையபடி சிக்கனத்துக்குள் நுழைந்திருக்கிறேன். முதலில் சிரமமாக இருந்தாலும் இந்த இரண்டு நாட்களாக பழகிவிட்டது.

சாலையின் ஓரத்தில் விரித்திருந்த கடையில் என்னை ஈர்த்த டெரகோட்டா பொம்மைகளை வாங்காமல் வந்தது.

ஆட்டோ பிடிப்பதற்கு பதில் நடந்துச் சென்றது.

மத்திய வர்க்கம் கீழ்வர்க்கம் என்னும் நிலை மாறி அனைவரும் சமமென தனி சலுகைகள் மறந்து வங்கிகளில் வால் பிடித்து நின்றது.

இதில் ஆட்டோ ஓட்டுனரும் கைவினைக்காரரும் பாதிக்கப்பட்டாலும் என் வீட்டிற்கும் உடம்பிற்கும் எண்ணங்களுக்கும் நல்லதைத்தானே செய்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறது.

complete-details-about-discontinuation-of-rs-500-1000-notes-2

நம்மால் முடியாதபட்சத்தில் அதிகாரமாய் திணிக்கப்பட்ட ஒன்றை ஏற்றுக்கொள்ளுதல் என்பது நமக்கு பழக்கப்பட்டதுதானே.

சில நேரங்களில் சில விஷயங்களில் அதிரடிகளும் தேவையாகிறது, ஊருக்கு போயிருக்கும் மனைவி சடாலென வந்து நிற்பது போல… அது ஒரு இனிப்பும் உவர்ப்பும் கொண்ட விஷயம். ஏற்றுக்கொண்டு அந்த மனநிலைக்கு மாறுவதில்லையா..அதேபோலவே இதுவும்.

பண முதலைகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் பொதுமக்களாகிய நாம் சிக்கனத்தை கற்றுக்கொண்டதும், அனைவரும் ஒரே இடத்தில்தான் என்னும் மனப்பாங்கையும் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் சற்று மறைந்து எல்லோரிடமும் சகஜமாய் பேசும் உணர்வையும் வளர்த்துக்கொண்டதையும் வரவேற்கத்தான் வேண்டும்.

55316719

காவி கட்டியவர் என்னும் பார்வையை விடுத்து, நாட்டின் பிரதமர் என்னும் நோக்கில் அவரின் செயல்களை கவனிப்போம். மீறினால் குரல் கொடுப்போம். மீறாதவரை பொறுமை காப்போம்.

~ அகிலா..

Posted in ahilas blog, குடும்ப வன்முறை, சமுகம், சமுதாயம், டீக்கடை, பாலியல் வன்முறைகள், பெண் முன்னேற்றம், பெண்கள், பெரியார், பொதுவானவை, மூட நம்பிக்கைகள், Thanthai Periyar, Women Empowerment

பெரியாரும் பெண் முன்னேற்றமும்

பெரியாரும் பெண் முன்னேற்றமும்

“ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும்.”

பெரியார் அவர்கள் சொன்னபடி, படிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்.”

அதுவும் சட்டமாகியிருக்கிறது.

 

“கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை.”

அதையும் செய்துவருகிறோம்.

தந்தை பெரியார் சொன்ன, செயலாக்கிய, செயலாக்கம் பெற போராடிய, பெண் உரிமையை, விடுதலையை, கிட்டதட்ட நெருங்கிய பின்பும் சமூகத்தில் ஏன் இத்தனை பெண் சார்ந்த வன்முறைகள்?

 

தனக்கு எதிராய் பெண்ணை ஏற்றுக் கொள்ளமுடியாத ஆண்வர்க்கத்தின் நிலைபாடும் இதற்கு ஒரு காரணம்.

 

  1. இன்றைய ஆண் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள், அவர்களுடன் பழகும் பெண்பிள்ளைகளை, தோழிகளை, அவர்களுடன் பயிலும் சக மாணவிகளை, தன்னைவிட வயதில் மூத்த பெண்களை எவ்வாறு சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், எவ்வாறு அணுகவேண்டும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலையும், புரிவதற்கான வழிமுறைகளையும், பழகும் முறைகளையும் சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.

  2. பெரியாரிஸம் பேசும் பகுத்தறிவாளிகளும் அரைத்த மாவையே அரைப்பதை விடுத்து, சற்று அவரின் சிந்தனைகளை காலத்திற்கு ஏற்றார்போல், அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகவேண்டும்.

  3. பெண்மக்களின் முன்னேற்றம் மட்டுமல்லாமல், பாதுகாப்பு குறித்த விஷயங்களையும் சமூக அமைப்புகள், அரசியல்கட்சிகள் கணக்கில் கொள்ளவேண்டும்.


பெரியாரின் சிலைக்கு மாலையிடுவதோடு நிறுத்திவிடாமல், பெண் பாதுகாப்பில் அனைவரும் அக்கறை எடுத்தால், நாளைய சமூகத்திலாவது சுவாதிகள் இல்லாதிருப்பார்கள்..

 

 

 

Posted in சமுகம்

பெண்களுக்கு..

விரல்கள் பத்திரம்..

உறவில் ஒரு பெண்மணியை தற்செயலாக நேற்று சந்தித்தேன்.

அவரின் இரண்டு கைகளின் உள்பக்கத்தில் மணிக்கட்டு முதல் வளையல்கள் நிற்கும் இடம் வரை வெளுத்துப் போயிருந்தது. அரிப்பும் ஏற்பட்டு, அவ்வப்போது சிவந்துவிடுவதாகவும், தானே சரியாவதாகவும் கூறினார்.

காரணம் கேட்டால், ‘சமைக்கிறேன், பாத்திரம் கழுவுகிறேன் இத்தனை வருஷமாக, அதுதான்’ என்று அதற்கு தெளிவாக ஒரு பதிலும் சொன்னார்.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாங்கு மாங்கென்று நேர்ந்துவிட்ட மாதிரி சமையல்கட்டில் வேலை பார்ப்பார்கள். அந்த நேரத்தில், தன் கைகள், விரல்கள், முகம், கழுத்து எல்லாம் சேதமாவதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். புத்திசாலித்தனமாக பொறுமையாக அந்த வேலையை செய்யும் தன்மை கிடையாது என்பது வருத்தமான விஷயம்.

சில விஷயங்களை சமையல் செய்யும்போது கவனித்து செய்தாலே போதும்:

1. காய் நறுக்கும்போது, அருவாமனையை தள்ளி வைங்க. கட்டர் பயன்படுத்துங்க. அப்படியே அருவாமனையைப் பயன்படுத்தினாலும், காய்கறிகளுடன் சேர்த்து அழுத்தம் கொடுக்கும் பெருவிரலில் சிறுசிறு கீறல்கள் விழாமல் நறுக்குங்க. நம்ம விரல் அழகை நாமதான் பார்த்துக்கோணும்.

2. தாளிக்கும்போது, சமையல் எண்ணெய் முகத்தில், கழுத்தில், கையின் உள்பாகங்களில் தெறிக்காமல் தள்ளி நின்று வேலை செய்யுங்க. பொட்டு பொட்டாக சுட்டுக்கொண்டு நிற்பதற்கு, இது ஒன்றும் வீரத்தழும்பு இல்லை.

3. பாத்திரம் கழுவும்போதும், அதன் பின்னும் கையில் பாத்திரம் கழுவுவதற்கான சோப்/பவுடர்/திரவம் சுத்தமாய் இல்லாதவாறு கைகளை நன்றாக கழுவுங்க. அப்போதுதான், நான் சொன்ன அந்த பெண்மணியின் கைகளில், இத்தனை வருட அனுபவத்தில், அந்த கெமிக்கல் அரித்திருந்தது போல வராமல் இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால், கைகளையும் கால்களையும் நன்றாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று எங்கும் சட்டம் இல்லை.

நீட்டாக பட்டுபுடவை கட்டி, நகை போட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு, இன்னாரின் மனைவி நான், அவர் என்னை இவ்வளவு செல்வசெழிப்பில் வைத்திருக்கிறார் என்று கல்யாணவீடுகளில் காட்டிக்கொள்வதைவிட, நம் உடலை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதையும் கவனிக்க பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

அப்புறம் நம்ம வீட்டு ஆண்கள், அடுத்த பெண்களைப் பார்த்து ஆசைப்படுவதை நிப்பாட்டிட்டு, நம்ம விரல்களையும் பார்த்து, வெண்டைகாய் மாதிரி (அட..அப்போவும் சமையல் பொருள்தான் ஞாபகத்துக்கு வருது.) இருக்குன்னு கொஞ்ச மாட்டாங்களா என்ன..

அவங்களை விடுங்க, நம்ம பிள்ளைங்க நாம நல்லாயில்லைன்னா, ஸ்கூலுக்கு வராதேம்மா, அப்பாவே வரட்டும்னு சொலவதையும் கேட்கிறோம்.

யோசிங்க.. வீட்டில் இருந்தாலும் அழகாய் ஆரோக்கியமாய் இருக்க முயற்சிப்போம். இதை படிக்கும் ஆண்கள் உங்க வீட்டு பெண்களிடம் சொல்லுங்க. 

Posted in ahilas blog, சமுகம், சமுதாயம், தேர்வு, படிப்பு

படிப்பும் ஒழுக்கமும்..

cat_write_paper_pencil_desk_hg_clr

எங்கே போனாலும் நம்ம கண்ணுலேயே எல்லாம் படுது..எக்ஸாம் எழுத போன இடத்துல கூட..

எக்ஸாம் ரூமுக்கு முன்னாடி, கும்பலா கொஞ்ச பேர், தனியா தனியா கொஞ்ச பேர் இப்படி எல்லாம் உட்காந்து படிச்சுகிட்டு இருப்பாங்க. பார்த்திருப்பீங்க.

அப்படி ஒரு கும்பல இரண்டு நாளா எக்ஸாம் ஹால்ல பார்த்துகிட்டு இருக்கேன்.

ஒரு ஆளு, ஆறு ஏழு பொம்பளங்க அல்லது பொம்பள பிள்ளைங்க (கல்யாணம் ஆனவங்களும் ஆகாதவங்களும்) வட்டம் கட்டி உட்கார்ந்து படிக்கிறாங்களோ இல்லையோ அரட்டை..

எல்லார்கிட்டேயும் உரசிகிட்டும் சிரிச்சுகிட்டும் பேசிகிட்டு இருந்தார் அந்த ஆளு. அவளுங்களும் அப்படிதான். வீட்டை விட்டு வெளியே வந்தா, வீட்டுக்காரரை மறந்துருவாங்க போல..

அதுல ஒரு பொம்பளை மட்டும் சிரிக்காம கொஞ்சம் உம்முனு இருந்தாங்க. அவங்க நடந்துகிறதுல இருந்தே தெரிந்தது, அவங்க அந்த ஆளோட மனைவின்னு. ரெண்டு பேரும் பரிட்சை எழுத வந்திருக்காங்க போல.

மூணாவது நாளும் இப்படி கெக்கெபெக்கென்னு சிரிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு invigilator கட்டு பேப்பரோட வந்தாங்க. என்ன கடுப்பில இருந்தாங்களோ தெரியல, பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க.

‘இது என்ன பீச்சா..காத்து வாங்கவா வந்துருக்கீங்க? இரண்டு நாளா பார்த்துகிட்டுதான் இருக்கேன், படிக்கிற இலட்சணமே இல்லையே. எக்ஸாம் எழுத வந்த மாதிரியே தெரியலையே. இது காலேஜ். ரூம் போட்டு செய்ற வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்கன்னு’ ஒரு மிரட்டு மிரட்ட, அப்படியே அவனும் அவன்கூட கடலை போட்டுகிட்டு இருந்தவளுங்களும் கப்சிப்..

ff8a46d74ea787774d9e02bd7d797787

எனக்கு மட்டுமல்ல இதை கவனிச்சுக்கிட்டு இருந்த மத்தவங்களுக்கும் சந்தோஷமா இருந்தது. படிக்கும் போது படிப்பை மட்டும் பார்க்கனும். பொறுக்கிதனம் பண்ணக்கூடாது. அது படிப்புக்கு செய்ற துரோகம்னு ஏன் இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது?

Invigilator சத்தம் போட்டதிலிருந்து ஒன்னு மட்டும் புரியுது, படிப்பின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் நம் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கை பெரிதாய் குலையவில்லை என்பது. Correspondence exams தானே, நமக்கென்னன்னு இருக்காமல், படிக்கிற இடத்துல ஒழுக்கத்தை முதன்மைபடுத்தியதற்கு ஒரு சபாஷ் சொல்லணும் அவங்களுக்கு.

அவன் மனைவி முகத்தைப் பார்த்தேன். அப்படி ஒரு புன்முறுவல்….இல்லைங்க, இதுக்கு பேர்தான் பொன்முறுவல்… 

book-animation-217676

Posted in சமுகம், சமுதாயம், சேலை, பெண்கள், பொதுவானவை

பெரிய பூப்போட்ட சேலை..

பெண்பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசைகள் பதின் பருவத்தில் அதிகமாய் இருக்கும். அந்த கட்டத்தில்,அதாவது, பாவாடை சட்டை போட்ட வயதில், எங்களுக்கெல்லாம் அக்காமார்கள் கட்டும் தாவணியின் மீது ஒரு கண் இருக்கும்.
தாவணி கட்டத் தொடங்கியபிறகு, அடுத்ததாய் அம்மா கட்டியிருக்கும் சேலையின் மீது மோகம் ஸ்டார்ட் ஆகிரும்.
எண்பதுகளின் காலகட்டத்தில், நமது தமிழ் சினிமா கதாநாயகிகளின் பெரிய பூக்களுடன் பார்டர் வைத்த ஷிப்பான் மற்றும் ஜார்ஜட் புடவைகளின் மீதும் ஒற்றை ரோஜாவின் மீதும் அளவுக்கதிகமான காதல் இருந்தது.
டிவியில் காட்டும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், கதாநாயகியை அந்த சேலையுடன் பார்த்தால், அம்மாவிடம் அப்ளிகேஷன் போடத் தொடங்குவோம்.
அவங்களுக்கு நாம சேலை கட்டனும்ன்னு சொன்னாலே கடுப்பாகி பத்ரகாளி ஆகிருவாங்க. ‘ முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ளே சேலையாம்…’ ன்னு விரட்டிவிட்டுருவாங்க. நாம அம்மாவான பின்னாடிதானே அவங்க கஷ்டம் நமக்கு தெரியுது.
அப்படி இப்படி போராடி ஒரு சேலை வாங்கினால், அதுக்கு இருக்கும் வாழ்வே தனி. பீரோவில், நமக்குன்னு ஒதுக்கிய அறையில் எல்லா துணிகளுக்கும் மேலே அது உட்கார்ந்திருக்கும்.
 
இப்படி இருக்கிற நேரத்தில, பாரின்லேயிருந்து (எந்த பாரின்லேன்னு எல்லாம் கேட்கக்கூடாது, அப்போ அப்படிதான் சொல்லுவாங்க) எங்க சொந்தகாரங்க ஒருத்தங்க, ஒரு பாரின் புடவையைக் கொடுத்துட்டு போனாங்க.
அதன் உடம்பு முழுவதும் குட்டி பூக்கள். கண்ணாடி மாதிரி இருக்கும். அதன் ஸ்பெஷாலிட்டியே அதை மடிச்சா கைக்குட்டை சைஸ்க்கு ஆகிடும். அம்மாவுக்கு அந்த வயசுல அதை கட்ட முடியாதுன்னு அது என்கிட்டே வந்தது. (நாம எந்த வயசுலேயும் எதையும் கட்டுறோம் இப்போ)
ஏதாவது வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிட்டுப் போகமாட்டாங்களான்னு இருக்கும், அப்போ அதை கட்டிக்க அனுமதி கொடுக்கணுமேன்னு இருக்கும், எப்போடா பள்ளிக்கூடத்தை மூட்டை கட்டிட்டு, காலேஜ் சேருவோம்ன்னு இருக்கும். அப்போதானே கலர் டிரஸ் போடமுடியும்ன்னு தோணும். அதை பார்க்கும் போதெல்லாம், நம்மளை பெரிய மனுஷி ஆகவே விடமாட்டேங்குறாங்களே இந்த அம்மான்னு எரிச்சலாக இருக்கும்.
அதன் வழுவழுப்பை, அப்பப்போ தடவிப் பார்க்கிறது, மெலிசாய் இருக்கும் அதன் ஒரு சைடுக்குள் கையை வைத்து அந்த பக்கம் இந்த பக்கம் கண்ணாடி காட்டுறது இப்படி எல்லாம் நடக்கும்.
நம்ம செய்றதை எல்லாம் பார்த்து நம்ம அம்மாவுக்கு கலவரம் ஆகிடும். வயித்துல புளியைக் கரைக்கும். அதைப் பார்த்தாலே நமக்கு, இரட்டை சடையில் ஒன்றை பின்னிக்கொண்டே பின்னாடி தூக்கி வீசிட்டு ஒரு சந்தோஷத்துடன் நடக்கச் சொல்லும். எல்லாம் சேர்ந்து, திமிரும் சந்தோஷமுமாய் அழகான ஒரு பருவம் அது.
ம்ம்…மீண்டும் வராத மகிழ்வான பருவமும் அதுதான்..
Posted in அனுபவம், குடும்பம், சமுகம், சமுதாயம், திருமணம், விவாகம், widow

கைம்பெண்ணும் தபுதாரனும்..

vidhya2

சமீபத்தில் வந்த ஓரு விழாவுக்கான அழைப்பிதழில், ‘விதவையர் நல சங்கம்’ என்ற சொற்கள் கண்ணில் பட்டது.

விதவை என்னும் சொல்  மனதுள் ஒரு சிறு கோபம் கலந்த வருத்தம் தோற்றுவித்ததை மறுப்பதற்கில்லை. விதவை என்னும் சொல்லை ஒழித்து குடும்பத்திற்கான நல சங்கமாக மாற்றலாம். அந்த பெண்களை மட்டும் குறிக்க வேண்டுமானால், அவளை பெண் என்பதை பறைசாற்றும் வேறு சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்துங்கள்.

துணைவியர், இல்லத்தரசிகள் என்று நிறைய சொற்கள் இருக்கும்போது இன்னும் எதற்கு அந்த சொல்? இல்லையென்றால், இவை, துணைவியார், இல்லத்தரசி போன்ற சொற்கள், இந்து ஆகம சட்டத்தின் படி சுமங்கலிகளை மட்டுமே குறிக்கும் சொற்களா என்ன.. கணவனை இழந்தால் அந்த பெண்கள் வாழ தகுதியற்று போய்விட்டார்களா என்ன.

திருமணம்தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், அதையும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைப்போம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்த விரும்பாதவர்களால்தான் பெண்கள் மட்டும் பலியாகிறார்கள்.     

மறுமணங்கள் புழக்கத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், பெண்களை விதவை என்று இவ்வாறு முத்திரை குத்தும் பழக்கம் இன்னும் முடியவில்லை. ஆணை விட பொருளாதாரத்தில் பெண் பின்தங்கியிருக்கும் வரை இது தொடரும் என்றே தோன்றுகிறது.

இன்று கணவனை இழந்த பலர் கைத்தொழில் மற்றும் வீட்டு வேலைகள் செய்து சுயமாய் வாழ்கிறார்கள். அப்போது அவளும் ஆணைப் போலவே சுயமாய் வாழ உரிமை இருக்கிறது அல்லவா. அப்புறம் எதற்காக பழைய வாழ்க்கையின் இழப்பை சொல்லிக்காட்டும் சொற்கள்.. அவளாக அவனோடு வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளோடு மனதால் வாழ்வது வேறு. சமூகமாக சேர்ந்து ஒரு சொல்லைக் கொண்டு அவளை வாழ தகுதியற்றவள் என்பது வேறு.

விதவை, கைம்பெண் என்பதன் ஆண்பாற் சொல் தபுதாரன் என்பது. அது வழக்கொழிந்து போனது. காரணம், ஆண்கள், மனைவியின் மறைவுக்கு பின், பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல பெண்களை மணந்து கொள்வதாலும் தபுதாரன் என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டதாய் நூல்கள் சுட்டுகின்றன.

இந்து தர்ம சாஸ்திரம் கூறுவதுபடி, திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது. இதையெல்லாம், பெண்களுக்கு மட்டும் சாத்திவிட்டு,  ஆண்கள் இந்த வழக்கத்தில் இருந்து எல்லாம் விடுதலை பெற்றுக்கொண்டார்கள்.

இன்றும் கணவன் இழந்த பெண்கள் தன் பிள்ளைகளின் திருமண சபைக்கு கூட வர இயலாதவராய் தூணுக்கு பின் நிற்கும் நிலை பல ஊர்களில் இருக்கின்றன. பட்டபடிப்பு முடித்து வீட்டில் அடைப்பட்டுப் போன ஒரு பெண்ணால் கூட இந்த விஷயத்தில் அவளாகவே சுயமாய் நிமிர முடிவதில்லை. அந்த அளவுக்கு அவளின் அடி மனதில் கற்கள் கொண்டு கட்டப்பட்டு பலமாய் அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது சமுகத்தால்.

அதிகமாய் பெண்களிடையேதான் விழிப்புணர்வு தேவைபடுகிறது. ராஜாராம் மோகன்ராய் ஒழித்த உடன்கட்டை ஏறுதல் போன்ற சாபக்கேடுகளைப் போலவே இந்த சொற்களும் அதன் பின் நடைபெறும் அமங்கலமான நிகழ்வுகளும் இருக்கின்றன.

யாராவது ஒரு ஆண் இறந்தால், ஊரில் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொழுதுபோக்க, அந்த பெண்ணை அதன்பின் வரும் நாட்களில் துன்புறுத்தி பார்க்கும் நிகழ்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல வீடுகளில் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுப்பதால் சற்று குறைந்து, இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கிறது.

பழமைவாத சொற்கள் கொண்டு பெண்களை ஒரு சட்டத்துக்குள் அடைப்பதை முடிவுக்குக் கொண்டுவர பிரயத்தனப்படுவோம். கணவன் இறந்தாலும் தன் சுயம் இறப்பதில்லை என்பதை பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

நம் பெண்கள் கடக்கவும், போராடவும், இன்னும் காததூரம் அல்ல,நெடுந்தொலைவு உள்ளது. அதுவரை வலிமையையும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு கொடுப்போம்.

 

varanasi-widows

Posted in ahilas blog, அகிலா, இளமை ஊஞ்சலாடுகிறது, சமுகம், சமுதாயம், சினிமா, சினிமா விமரிசனம், தமிழ் சினிமா, cinema, kamalahassan, movie review

மீண்டும்..

 

டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது.

அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம்.

காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம்.

நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் அறிவாளிகள் இல்லை, பெண்களும்தான்..ஆனால் அவர்கள் அளவுக்கு எங்களால் அப்போது வெளிவர முடியவில்லை என்பதை இப்போதும் தோழிகள் நாங்கள் யோசிப்பதுண்டு. )

காதலும் மோகமும் வேறு வேறு என்பதை பிரித்தறியா காலம் அது. அவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறே என்று சொன்ன திரைப்படம் அது. அப்போது அதை ஏற்கும் மனநிலை இல்லை எங்களுக்குள். ஆனால், புதிதாய் ஒரு பார்வை காதலுக்குக் கொடுத்தது அந்த திரைப்படம் எனலாம்.

உடல் ரீதியான விஷயங்களுக்கு காதல் மட்டுமல்ல, சூழலும் இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியான பழக்கமும் காரணங்கள் எனவும் புதிதான ஒரு பார்வை அந்த திரைப்படம் காட்டியிருக்கிறது. காதலற்று ஒரு உறவு உண்டாவதும், காதலுடன் நாயகி உறவுக்காய் காத்திருப்பதும், ஏற்றுக் கொள்வதும் திரைக்கதையின் போக்கை புதிதாய் புரிய வைக்க முயற்சித்திருக்கிறது.

இதை அந்த காலத்தில் ஒரு முயற்சியாக ஸ்ரீதர் இயக்கினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அதை ரசிகர்கள் ஜனரஞ்சகமான ஒரு திரைப்படமாகவே பார்த்தார்கள் என்பது மட்டுமே உறுதி. அதை 175 நாட்கள் ஓட்டி வெற்றி படமாக்கியதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

சமூகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாதபோது சொல்லப்படும் சில விஷயங்கள் சமூக கட்டுகள் சற்று தளரும் சமயங்களிலேயே புரியப்படுகிறது.

ம்ம்..மீண்டுமாய் ஒர் இளமை ஊஞ்சலாடுகிறது..

 
Posted in ahilas blog, இந்தியா, குடியரசு தினம், சமுகம், சமுதாயம்

குடியரசுதின வாழ்த்துகள்

குடியரசுதின வாழ்த்துகள்

157547

 

இன்று நமது இந்தியாவின் 67வது குடியரசு தினம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயலாக்கப்பட்ட நாள் இது. 66 வருடங்களுக்கு முன்பு முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் கொடி ஏற்றி குடியரசை துவக்கி வைத்த  நாள்.

சுதந்திர தினம் என்பது நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள். நம் நாட்டுக்காக அநேகம் பேர் தியாகம் செய்து கிடைத்த வரலாறு கொண்ட நாள். நம்மை உணர்பூர்வமாய் பினைக்கக்கூடிய ஒன்று.

ஆனால் குடியரசு தினமோ பெரும்பாலும் வெறும் ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் குளிரும் பனியும் போட்டி போடும் டில்லியில், பிரதமர் அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைக்க, குடியரசு தலைவர் கொடி ஏற்றுவதும் விமானங்கள் பூ தூவுவதும், முப்படைகள் அணிவகுப்பதும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் பார்வையிடுவதும், வீர சாகசங்களுக்காய் விருதுகள் வழங்கப்படுவதுமாக கொண்டாட்டங்கள் ஆகவே நகர்ந்து அது முடிந்தும் விடுகிறது. அதன் பிறகு நம்ம டிவியில் வேறு சேனல் திருப்பி, இன்றைய விடுமுறை நாளை சினிமாக்களோடும் சினிமா நட்சத்திரங்களோடும் கொண்டாடி முடிப்போம்.   

தீபாவளி பொங்கலை போல் ஏதோ ஒரு பண்டிகை அல்ல குடியரசு தினம் என்பது. நம் இந்திய அரசியல் சாசனம் Dr. அம்பேத்கர் அவர்களை முதன்மையாளராக கொண்டு வரையப்பட்டு அங்கீகரிப்பட்ட தினம். உலகின் மிக பெரிய ஜனநாயகமாக நம் பாரதம் உருவாகிய தினம். பல மொழிகள், பலவிதமான கலாசார விகிதங்களும் கொண்ட 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேஷங்களையும் கொண்டது. எனினும் ஒரே பாரதமாக நிமிர்ந்து நிற்கிறது.

கடந்த வருடங்களில் முதல் முயற்சியிலேயே ISRO Mars Mission, மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டது, 100 Smart Cities, அதிவிரைவு புள்ளட் ட்ரைன், சுத்தம் போற்றுதல் போன்று எத்தனையோ முன்னேற்றங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டாலும் இன்றைய தேதியில் நாம் இன்னும் ஏழ்மை, லஞ்சம், சுகாதாரமின்மை, எல்லோருக்குமான கல்வி மற்றும் மருத்துவ வசதி, விவசாயமும் விளைநிலங்களும் குறைந்து வருதல், அதனால் ஏழை விவசாயிகளின் தற்கொலைகள், பெண்களின் முன்னேற்றத்தில் தடைகற்களாய் பாலியல் வன்முறைகள் போன்ற நிறைய விஷயங்களில் போராடி வருகிறோம்.

இந்த குடியரசு தினத்தன்று நாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்

குடியரசு என்றால் என்ன…

குடி மக்களுக்கான அரசு என்பது. அந்த அரசு எங்கிருந்து வருகிறது. நாமதான் நல்லவிதமாக அரசை செயல்படுத்துபவர்களாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்து பதவி ஏற்றுகிறோம்.

சரி, நாம நல்ல குடிமக்களாய் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்த்தால், மூன்று கேள்விகள்தான்..

முதலில், தேர்தலில் நமது வாக்கை பதிவு செய்கிறோமா…

பெரும்பாலும் அரசியல்வாதிகளைக் குறை சொல்லிவிட்டு பேசாமல் இருந்துகிறோம். பிடித்தவர்களுக்கு ஓட்டளிக்கவும், பிடிக்கவில்லை என்பதை சொல்லவும் கூட நமக்கு உரிமை இருக்கு. அதையும் நாம் எடுத்துரைக்கலாம். ஓட்டுரிமையை மறுத்தல் நல்ல குடிமக்களுக்கு அழகல்ல.

இரண்டாவதாய், பெண்களுக்கான மரியாதையையும் தளத்தையும் ஏற்படுத்திக்  கொடுக்கிறோமா..

பெண்கள்…இன்றைய இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களின் வாழ்வு நிலை அப்படியே உள்ளது. பெண் மட்டுமே பெரும்பாலான வீடுகளில் அலுவலகமும் வீடுமாக போராடிக் கொண்டிருக்கிறாள். ஆணும் பெண்ணும் இணைந்தே வீட்டில் உழைக்க மறுக்கும் நிலையில், சுகாதாரமற்ற உணவுகளை கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிடகொடுக்கும் நிலை. அதனால் சிறு வயதிலிருந்தே நோய் எதிர்ப்புதிறன் குறைந்து வருகிறது.

பெண்ணை உயர்த்த, குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்ற சற்று ஆண் என்னும் பதவியிலிருந்து இறங்கி வருவோம். சேர்ந்து உழைப்போம். பெண்ணின் பாரம் குறைப்போம். வீட்டில் பெண்ணுக்கு மமதை கொடுப்போம். குழந்தைகளுக்கு பெண்களின் அருமைகளைச் சொல்லிக் கொடுப்போம். அதுவே பக்கத்து வீடு, அதற்கு அடுத்த வீடு அடுத்த தெரு, அடுத்த ஊர் என்று பரவி பெண்ணின் உயர்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

மூன்றாவதாய், மனிதத்துடன் இருக்கிறோமா…

நம்மை சுற்றியிருக்கும் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். நம் கண்முன் நேரும் சிறு துன்பங்களின் துயர் துடைப்போம்.

சென்னையை அலசிவிட்டு வடிந்த வெள்ளம் நம் மனிதத்தின் ஒரு சான்று. இன்னும் மனிதம் இருக்கிறது என்பதற்கான பசுமை அறிகுறி. அதன் பிறகு நாம் என்ன செய்தோம். அவரவர் வீடுகளுக்குள் பழையபடியும் அடைந்துக்கொண்டோம். வெளி வருவோம். இன்னும் மனிதம் போற்றுவோம்.

என்ன விதைக்கிறோமோ அதுவே விருட்சமாகும். நல்லவைகளையே விதைப்போம். அவற்றையே அறுவடை செய்வோம். எதிர்கால சந்ததியினருக்காக கொடுப்போம்.  

வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்

 

Republic-Day-Animated-GIF-Images

Posted in ahilas blog, அகிலா, அனுபவம், ஆண்கள், உறவுகள், குடும்ப வன்முறை, குடும்பம், சமுகம், சமுதாயம், பெண்கள்

பெண்களால் நல்லறம்

சகுனியாய் சில ஆண்கள்..

k6426604

பெண்களின் பலமும்  பலவீனமும் குடும்பம் சார்ந்தே  அமைந்துவிடுகிறது. பெண்கள்  குடும்பத்தின் மீது  வைத்திருக்கும்  அதீத  அன்பும்  அக்கறையும் தான் இதற்கு  காரணம். நிறைய  குடும்பங்களில்  ஆண்கள் இதை  சரியாக  தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நேற்று  என் தோழி ஒருவர் போன் பேசியிருந்தார். மன  உளைச்சலுடன் பேசினார். படித்தவர். மிகவும் யோசித்து எந்த செயலையும் செய்பவர். என்ன விஷயம் என்று வினவியபோது, சொல்லத் தொடங்கினார். எப்போதும் யோசித்து செயல்படும் அவரை, அவர் கணவர் குடும்பத்தில் சகுனி நீதான் என்று தன்னைச் சொல்லிவிட்டதற்காக நிறைய குறைப்பட்டுக் கொண்டார்.
சகுனி என்னும் ஒரு சொல் அவரை மிகவும் வேதனைபடுத்திவிட்டது. 
 
அதுக்காக ஏன் வருத்தபடனும்னு அவங்ககிட்டே கேட்டேன்.
 
சகுனி யோசித்து செயல்படும் திறன் வாய்ந்தவனாக புராணத்தில் காட்டப்பட்டவன். தனக்கான தர்மத்தை தானே வென்றவன்.
 
தன் தகப்பனின் எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட தாயம் உருட்டி, மகாபாரத போருக்கு வித்திட்டு, தருமத்தை ஜெயிக்க வைத்தவன். பாண்டவர்களின் பலம் அறிந்தவன். தன் குடும்பத்தை அழித்த கௌரவர்களைத் தன்னால் அழிக்கமுடியாது என்பதறிந்து பாண்டவர்களைக் கொண்டு பழிதீர்த்துக் கொண்டவன். அவன் அறிவானவந்தான். ஆனால், தன் அறிவின் செயல்களை அழிவு நோக்கி செயல்படுத்திவிட்டான். அவ்வளவே.
 
அறிவாய் யோசிப்பவன் சகுனி என்றால், நாம் யோசித்து அறிவாக, குடும்பத்துக்காக, நல்ல சகுனியாக செயல்படறோம்னு பெருமைப்படு என்றேன்.
 standing-man-clip-art-195700
அப்போ, அந்த மகாபாரத சகுனி, அதாவது கெட்டதை தலைமுறையாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி வருவது, யாருன்னு பார்த்தால், தோழியின் கணவரைப்போல் இன்றும் இப்படி பேசி வரும் ஆண்கள்தான்.
 
பெரும்பாலான ஆண்கள் பேசும்போது சொல்வாங்க, எங்க வீட்டுல அவ்வளவு அறிவு கிடையாதுங்க என்று. உங்களுக்காக சமைக்கவும், உங்க குழந்தைகள், பேரப்பிள்ளைகள் எல்லோரையும் கவனித்துக்கொள்ளவும் கோவிலுக்கு போய் விளக்கு போடவும் உங்களுக்காகவே வேண்டிக்கொள்ளவும் வீட்டில் ஒரு யோசிப்பு திறன் இல்லாத ஒரு மக்கு பெண் இருந்தால்தானே உங்களால் நிம்மதியாக வெளி உலகில் இயங்கமுடியும்.
 
வீட்டிலும் தன்னைப்போலவே இன்னொருத்தியும் யோசித்தால் சிக்கல், தினமும் வீட்டிலும் போராட வேண்டிவருமே என்பதால், ஆண்கள் முடிந்தவரை பெண்ணை இப்படியே இருக்கச் செய்துவிடுகிறார்கள்.
 
person-walking-clip-art-265011
கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்கள் கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து, அவளுக்காக போனேன் என்பார்கள். இப்படிப்பட்ட பொய் வேஷமும் ஒருவகையில் பெண் அடிமைத்தனமே.
 
ஒன்று, அவள் சாமி கும்பிட்டு நல்லது நடந்தால், அது தன்னையும் சேருமே என்ற போக்கு. இதிலிருந்து அந்த ஆணுக்கு தன் கொள்கை கடவுள் மறுத்தலில் சரியான நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம். நாலு பேருக்கு நடுவில் தன்னை அறிவானவனாக காட்டிக்கொள்ள அவனுக்கு கடவுள் மறுப்பு தேவைப்படுகிறது. மற்றபடி ஒன்றுமில்லை.
 
இரண்டாவது, இவன் உண்மையிலேயே மகா நல்லவனாக இருந்தால், தான் யோசிப்பது போல அவளையும் யோசிக்க வைத்திருக்க வேண்டும். அவளை அறிவாளி ஆக்கினால் ஒரே உறைக்குள் எப்படி இரண்டு கத்தி இருக்கமுடியும் என்று யோசித்து இங்கு சகுனியாய் பெண்ணுக்கு அழிவை விதைப்பவனாய் ஆணே இருக்கிறான்.
 
இப்போது புரிந்திருக்கும் ஆண் எவ்வளவு அறிவானவன் என்பதும் மகாபாரத சகுனியின் குணங்கள் யாரிடம் அதிகம் உள்ளது என்பதும்.
 8TznLXnRc
 
அறிவான பெண்மையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையால் வரும் வார்த்தைகள் இவை. மனதைக் காயப்படுத்தி வீட்டு பெண்ணை அழவைத்து பார்க்கும் ஆணின் இந்த குணம் கூட ஒரு வகையில் குடும்ப வன்முறைதான் (Domestic Violence).
 
இருவரும் அறிவாய் இருந்து, குடும்பம் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், அதை அழகிய இல்லறம் என்பேன். பெண்ணை அறிவற்றவளாக வைத்து, என் குடும்பம் உலகத்திலேயே நல்ல குடும்பம் என்று பெருமை பேசுபவர்களின் இல்லறம் நல்ல இல்லறம் அல்ல.
 
பெண்ணை தனக்கு ஈடாய் யோசிக்க வைத்து அதனால் தன் இல்லறம் செழிக்க வகை செய்பவர்களை நல்லவர்களாக போற்றுவோம். அறிவாய், தனக்கு ஈடாய் அல்லது தன்னைவிட அதிகமாய் யோசிக்கும் பெண்ணை மதித்து இருவரும் நல்லறமாய் ஓர் இல்லறம் நடத்தினால் அதுவே சிறந்த இல்லறம். பாரதியின் கனவும் அதுதான்.
பாரதி,

பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை

ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றதாகச் சொன்னவர் மகாகவி பாரதியார். அறிவான பெண்களை குடும்பத்தில் ஊக்கப்படுத்துவோம். அவர்களின் உயர்வில் இணையில்தான் இல்லறமும் நல்லறம் ஆகும்.

3d animasi woman playing violin animated human animation could be wallpaper and screensaver.gif